Tanjore Big Temple Navratri festival: அன்னபூரணி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 20, 2023, 8:21 AM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் ஆலயம், உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து கோயிலின் கட்டடக் கலையையும், சிற்பக் கலையையும் ரசிப்பதோடு, சாமியையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கடந்த 15ஆம் தேதி அன்று தொடங்கியது. இதனை அடுத்து தஞ்சை பெரிய கோயிலில் 5ஆம் நாளான நேற்று (அக்.19) ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் உள்ள அம்மனுக்கும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.