உதகை புத்தகத் திருவிழாவை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை (ஊட்டி) உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ஒட்டி உதகையில் பல்வேறு கலைத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் முதல் நிகழ்ச்சியாக கடந்த 5ஆம் தேதி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் வனத்துறை, தோட்டக்கலைத்துறை உள்பட அனைத்துத் துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய பழங்குடியின மக்களான தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பிரதிபலிக்கும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பார்த்து பயன் பெற்று வருகின்றனர். இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள அரங்குகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 11) பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து உதகை 200ஆவது ஆண்டின் லோகோ முன் நின்று ஆளுநர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்களின் வருகை பதிவேட்டில் ஆளுநர் தனது கையெழுத்தை பதிவிட்டார். இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.