'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் தா': தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்! - dmk scheme
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "அருள்மிகு" "ஸ்ரீ ஜெய கணபதி" திருக்கோயிலில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெற்றி பெற்றால், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழக அரசு பல மாதங்கள் ஆகியும் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இருந்து வந்தது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகையைப் பெற தகுதியானவர்கள், தகுதி இல்லாதவர்கள் யார் போன்ற வரையறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளியிடப்பட்ட வரையறைகள் மற்றும் தகுதிகள் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிக்கு எதிராக மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது எனவும், மக்களை ஏமாற்றாமல் மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்கட்சியினர் தேங்காய் உடைத்து கண்டன கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.