தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் வருகை - கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று (மே 14) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்து இருந்தார். இதனைத்தொடர்ந்து பாம்பார்புரம் சாலை வழியாக ஏரிச்சாலைப் பகுதியில் வாகனத்தில் உலா வந்தார். இன்று கொடைக்கானல் அப்சர்வேட்டரி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோஜா பூங்கா மற்றும் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வு மையத்தையும் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள ரோஜா பூங்கா பணியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அப்பணியாளர்களுடன் அவர் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு பழங்குடியினர் பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அன்னை தெரசா சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, பல்கலைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து, பின்னர் மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாட்டும் கோடையின் தாக்கத்தைப் போக்க, தமிழ்நாடு ஆளுநர் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.