நெமிலிச்சேரி அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. பயணிகள் அதிர்ச்சி! - ரயில்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 22, 2023, 1:36 PM IST
திருவள்ளூர்: திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் புகை வந்ததால், ஆவடி நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், பழுது சரி செய்யப்பட்டதையடுத்து, 20 நிமிடங்கள் காலதாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில், இன்று காலை நெமிலச்சேரி ரயில் நிலையம் அருகே வரும்போது, ஏசி பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பயணிகள் ரயிலின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த ஊழியர்கள், சிறிது நேரம் அந்த பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்து, பழுதை சரி செய்தனர்.
பின்னர், 20 நிமிடம் காலதாமதமாக அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மீண்டும் சென்னைக்கு சென்றது. திடீரென ஏசி பெட்டியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து, ரயிலில் இருந்து கீழே இறங்கினர். இதனால் அங்கு அரை மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.