'பேருந்தில் வளையோசை கலகல' - கண்டித்த பேருந்து ஓட்டுநரை மிரட்டிய கல்லூரி மாணவர்கள்! - வேலூர் குடியாத்தம்
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றில் படிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் பேருந்து மூலம் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனிடையே பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 25) குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசுப்பேருந்து பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் திப்பு சமுத்திரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் குடியாத்தத்திலிருந்து பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை நிறுத்திவிட்டு, மாணவர்களை உள்ளே செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால், கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மிரட்டி உள்ளனர். இதனைப் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் வீடியோ எடுத்து பள்ளிகொண்டா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பள்ளிகொண்டா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்களே சமரசம் பேசி பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தினந்தோறும் இது போன்ற பிரச்னைகள் நடைபெறுவதாகவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸ் உதவியோடு காரில் கடத்திய பெற்றோர் - குமரியில் நடந்தது என்ன?