வாகன ஓட்டிகளின் வேக வரம்பு குறித்து அரசிடம் ஆலோசனை: சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் - EVK Sampath Road Signal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-07-2023/640-480-19094344-thumbnail-16x9-trafficaware.jpg)
சென்னை: போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பி பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை பதாகைகள் கொண்டு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கி, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரத்கர், சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு 573 சாலை விபத்து மரணங்களும், 2022ஆம் ஆண்டு 508 விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 6 மாதங்களில் 11 % விபத்துகள் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு விபத்துகள் நடைபெறும் 104 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக அறிவித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், வழக்குகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் தற்போது ஆர்.எஸ்.பி பள்ளி மாணவ, மாணவிகள் 350 பேரை கொண்டு சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஒரு இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் சிக்கிய வாகன ஓட்டிகள், மீண்டும் மற்றொரு ஜங்ஷனில் சிக்கினால் அவர்கள் மீது மீண்டும் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
சாலைகளில் வாகன ஓட்டிகளின் வேக வரம்பு குறித்து அமல்படுத்துவது தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தி ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி முறையில் புகைப்படம் எடுத்து செலான் போடும் 150 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் 15 ஜங்ஷனில் பொருத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.