உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற குடும்பத்துடன் ஆஞ்சநேயர்க்கு சீர் எடுத்து வந்த ரசிகர்கள்! - ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 19, 2023, 6:04 PM IST
மயிலாடுதுறை: 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரையிறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
லீக் மற்றும் நாக் அவுட் என விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. அதேபோல் லீக் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி அதன்பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பல்வேறு கோயில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள ஸ்ரீ ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு கார்த்திகை மாத சீர் வைத்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிச் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.