ஆனி மாத பிரதோஷம்: அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - special abhishekam 2023
🎬 Watch Now: Feature Video
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு ஆனி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. பெளர்ணமி மற்றும் அமாவாசை வரும் 2 தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், ஆனி மாத சனி பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
சனி பிரதோஷ தினத்தின்போது, நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆனி மாத சனி பிரதோஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.