குன்னூரில் இருசக்கர வாகனம் - பள்ளிப்பேருந்து மோதி விபத்து - மாணவர் உயிரிழப்பு! - accident at Nilgiris
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 12:38 PM IST
நீலகிரி: குன்னூர் அருகே இருசக்கர வாகனமும் பள்ளிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ரோஷன் மற்றும் ராகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ரோஷன், குன்னூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, குன்னூர் அருகே உள்ள பந்துமை பகுதியில் பள்ளிப் பேருந்தும் ரோஷன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதி உள்ளது.
இதில் ரோஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த வெலிங்டன் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ரோஷனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு வந்த ரோஷனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்கச் செய்தது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து வெலிங்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.