குடியாத்தம் அருகே அரசு பள்ளி கழிவறையில் பாம்பு கடித்து சிறுமி காயம்.. அதிகாரிகள் ரியாக்ஷன் என்ன? - குடியாத்தம் அரசு மருத்துவமனை
🎬 Watch Now: Feature Video
வேலூர்: குடியாத்தம் அடுத்த ஓலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரின் மகள் பூவிகா(12), காலை வேளையில் பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது. அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது. இதனால் கதறி அழுத சிறுமியை அங்கிருந்த ஆசிரியர்கள் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஈடிவி பாரத் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பள்ளி வளாகத்திற்குள் பாம்பு எப்படி வந்தது?, கழிப்பறையின் பாதுகாப்பு, பள்ளியில் சுற்றுப்புற சூழல், மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை ஆகியவற்றைக் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினர்.
பின்னர், மாவட்ட கல்வி அலுவலர் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்த சம்பவம் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து குடியாத்தம் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,, "மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள்" தெரிவித்துள்ளனர்.