பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட குழு.. 14417 என்ற உதவி எண் அறிவிப்பு! - அமைச்சர் அன்பில் மகேஷ்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 8, 2023, 9:33 AM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என உயர்கல்விக்கு வழிகாட்டவும், கல்விக் கடன், ஸ்காலர்ஷிப் பெறுவதற்கும் வழிகாட்டுவதற்கு உயர்கல்வி வழிகாட்டிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது, "இத்திட்டத்தின் நோக்கம் அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுவது.வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் பலர் உயர்கல்விக்குச் செல்வதற்கு, அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டி கல்விக் கடன்களை வங்கிகளில் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தல், மேலும்  கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுதல் போன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு என உயர்கல்வி வழிகாட்டி குழு ஒன்று மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மாணவர்களுக்கு வழிகாட்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களே வழிகாட்டியாக இருந்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வேலையைச் செய்கின்றனர். ஆனால் எங்கே படிக்கலாம் என்ன படிக்கலாம் என்பதை பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அறிந்திருப்பதில்லை.

பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சார்ந்த தலைவர், துணைத்தலைவர், கருத்தாளர், கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்கள் என அனைவரையும் உள்ளடக்கி குழு இந்த உயர்கல்வி வழிகாட்டிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.மாணவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கல்லூரி தொடங்கி வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் வரை உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த குழு வழிகாட்டும். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த குழுவை அணுகி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

உயர்கல்விக்கு விண்ணப்பங்களை எங்கே பெறுவது, இணையம் மூலம் எப்படி விண்ணப்பிப்பது, எந்தெந்த கல்வி நிறுவனங்களுக்கு எந்தெந்த தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என அனைத்தையும் இந்த குழுவிடம் மாணவர்கள் கேட்டறிந்து செயல்படலாம். பள்ளிக்குச் செல்ல முடியாத தொலைவிலிருந்தால் 14417 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தேவையான தகவல்களைப் பெறலாம்.

மேலும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் அல்ல, பெறாதவர்களும் இந்த ஆண்டே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்குச் செல்வது எப்படி என்று அரிந்து கொள்ள வழிகாட்டி மையங்களையும் உதவி மையங்களையும் அணுகலாம். குறைந்த மதிப்பெண் காரணமாகவோ அல்லது தேர்ச்சி பெற்றது காரணமாகவோ யாரும் மனம் தளர வேண்டியதில்லை. மனநல ஆலோசனை தேவைப்பட்டாலும் இக்குழுவை நாடலாம். உதவி மையத்தின் எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம்.

மேலும், மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதற்கான முகாம்களை அரசுப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை நடத்துகிறது. பெற்றோர்களும் மாணவர்களுடன் பள்ளிக்கு வந்து வழிகாட்டி குழுவின் ஆலோசனைகளைப் பெறலாம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.