ரூ.100 ரூபாய்க்கு சேலை.. கடை முன் திரண்ட குடும்பத் தலைவிகள்! திக்குமுக்காடிய போலீசார்!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 19, 2023, 12:49 PM IST
தேனி: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆண்டிபட்டியில் 100 ரூபாய்க்கு சேலை விற்பனை அறிவித்ததால் கடையின் முன்பாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் செயல்படும் ஜவுளி கடை நிர்வாகம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒரு சேலையை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் புறங்களில் ஆட்டோவில் விளம்பரம் செய்தது.
இந்நிலையில், இன்று (செப்.19) அதிகாலை முதல் ஜவுளிக்கடை வாசலில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. கடையின் முன்பாக அதிகளவில் பெண்கள் கூடியதால் கட்டுப்படுத்த முடியாத கடை நிர்வாகத்தினர் ஒவ்வொருவராக கடைக்குள் அழைத்து சேலையை விற்பனை செய்தனர் மேலும், அதிகளவில் கடைகள் கொண்ட அந்த பஜார் வீதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார், கடையின் முன்பாக கூடியிருந்த பெண்களின் கூட்டத்தை அப்புறப்படுத்தினர். மணிக்கணக்கில் காத்திருந்த பெண்கள் சேலை வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஜவுளி கடையின் உரிமையாளர் 100 ரூபாய் சேலைக்கான ஆஃபர் முடிந்துவிட்டதாக அறிவித்தார். இதனால் 100 ரூபாய்கு சேலை வாங்க வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.