"தமிழ்நாடு என்ன திறந்த வீடா" - சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் - migrant workers tamil nadu
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கிடவும், குற்றப் பின்னணி உள்ள வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற கோரிக்கை விடுத்தும் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இருப்பினும், ஹோலி பண்டிகை கொண்டாட செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு வேலையில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், நாகலாந்து, மிசோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்நுழைவு கடவுசீட்டு இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் பரத்ராம் முத்தையா மற்றும் ராஜேஷ் ஆகிய இரு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'வந்தவன் எல்லாம் வளமாய் வாழ தமிழ்நாடு என்ன திறந்த வீடா' என்ற வாசகம் இடம் பெற்ற பதாகைகளை ஏந்தி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட வேண்டும், உங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் எடுத்துரைப்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் தமிழ்நாடு போலீசார் 12 பேர் கைது.. நடந்தது என்ன?