சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு! - 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 27, 2023, 2:09 PM IST
சேலம்: கோட்டை மாரியம்மன் கோயிலில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று காலையில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோட்டை மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு கடைசியாக கடந்த 1993ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கோயிலில் பழுதான மண்டப கட்டடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று அண்மையில்தான் முடிந்தன.
இந்த நிலையில், இன்று (அக்.27) காலை 8 மணி அளவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உச்சியில் அமைக்கப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு வழிபாடுகளை கோயில் குருக்கள் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் தமிழ் திருமுறைகள் ஓதப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் மீது புண்ணிய தீர்த்தமும் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.