வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டடம் சேதம்.. புதிதாக கட்டித்தர அரசு ஊழியர்கள் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 20, 2023, 4:47 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு முன்பாக புதுப்பித்து கட்டப்பட்ட கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் உதவிப் பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் உள்பட 5க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த அலுவலகத்தை உள்ளூர், வெளியூர் மக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கட்டடத்தின் கட்டுமானத் தூண்கள் விரிசல் விட்டும், மேற்கூரை கான்கிரீட் பூச்சுக் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் பெயர்ந்தும் விழுகின்றன. இதனால் இங்கு பணிபுரியும் அலுவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மழைக் காலத்தில் மழைநீர் ஒழுகுவதாக கூறப்படுகிறது. இதனால், இங்கு பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, இந்தக் கட்டடத்தை இடித்து புதிதாக கட்டடம் எழுப்ப வேண்டும் எனவும், அதுவரை இந்த அலுவலகத்தை வேறொரு கட்டடத்திற்கு மாற்றி செயல்பட வைக்க வேண்டும் என அலுவலகத்தைப் பயன்படுத்துவோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.