விவசாயி காரில் இருந்து ரூ.7.30 லட்சம் திருட்டு.. ஈரோட்டில் நடந்தது என்ன?

🎬 Watch Now: Feature Video

thumbnail

ஈரோடு: பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். விவசாயியான இவருக்குக் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் விவசாய தோட்டம் உள்ளது. ரமேஷ்குமார் டி.என்.பாளையத்தில் புதியதாக வணிக வளாகம் ஒன்றைக் கட்டி வருகிறார். இதற்காக இவர், அவரது உறவினர் தங்கவேலு என்பவரிடம் இருந்து 7.30 லட்சம் ரூபாய்க் கடனாக வாங்கியுள்ளார். 

அவ்வாறு கடனாக வாங்கிய பணத்தைப் பையில் பத்திரமாக எடுத்து வந்த அவர், அதை காரின் முன்பக்க இருக்கையின் கீழ் வைத்துக்கொண்டு டி.என்.பாளையத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு வந்துள்ளார். தோட்டத்தின் முன்பு காரை நிறுத்தி விட்டு தோட்டத்திற்குள் சென்ற ரமேஷ்குமார், சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து காருக்குள் சென்று பார்த்த போது, இருக்கையின் கீழே வைத்து இருந்த 7.30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார், இதுகுறித்து பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர். காரின் கண்ணாடி உடைத்து 7.30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.