அட்டகாசம் செய்த 'கருப்பன் யானை' பிடிபட்டது எப்படி தெரியுமா? வனத்துறை வெளியிட்ட ட்ரெய்லர் - பிடிபட்டது எப்படி தெரியுமா
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை வனத்துறையினர் பிடித்தது தொடர்பாக தயாரிக்கப்பட்ட குறும்படத்தின் ட்ரெய்லரை இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. அவ்வப்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விளை நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 'கருப்பன் யானை'யை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து, அந்த யானையை லாரியில் பர்கூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிப்பதற்காக கும்கி யானைகளை பயன்படுத்தி, கடந்த 4 மாத காலத்தில் மூன்று முறை முயற்சி செய்தும் பிடிக்கமுடியாத நிலையில் நான்காவது முறையாக யானையை வெற்றிகரமாக பிடித்ததால் இது தொடர்பாக கருப்பன் யானையைப் பிடிக்கும்போது வனத்துறை சார்பில் வீடியோ எடுத்து, அதை குறும்படமாக வெளியிட முடிவு செய்தனர்.
இன்று இது சம்பந்தமான குறும்படத்தின் ட்ரெய்லரை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ட்ரெய்லர் வீடியோ சத்தியமங்கலம் பகுதியில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.