அருணாச்சல் எல்லையில் 'ரியல்' ஆயுதங்களுக்கு பூஜை செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
🎬 Watch Now: Feature Video
தவாங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஆயுதப்படைகளின் தயார் நிலை குறித்துப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுடன் தசரா கொண்டாடினார்.
பின்னர் பேசிய அவர், இந்திய நாட்டின் கடினமான சூழ்நிலைகளில் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்கள் மக்களின் பாதுகாப்பிற்காகக் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத தைரியம் ஆகியவற்றுக்காக நாடே நன்றி கூறுகிறது.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிப்பதே தசரா. அந்த வகையில், அசாத்திய வீரம் பொருந்திய ஆயுதப்படை வீரர்களின் துணிச்சல் மற்றும் தர்மம் விஜயதசமி பண்டிகையின் முக்கிய சான்றாக உள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்ததற்கும், தற்போது சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும் ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பு மற்றும் வீரம் இன்றியமையாத ஒன்று.
மேலும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு இயந்திரங்களை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ராணுவ வலிமையை வலுப்படுத்த உள்நாட்டிலேயே பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது"என தெரிவித்தார். முன்னதாக ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு செய்தார்.