ஆவடியில் கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 30, 2023, 10:44 AM IST
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இதனால் தமிழத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று (நவ.29) காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இந்த நிலையில், ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயில் 26வது வார்டு சோழன் நகர், ஆடியபாதம் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பல்லவன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழை வெள்ளம், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நுழைந்ததால், பொதுமக்களின் உடைமைகள் மழை வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
மேலும் வீடுகளில் இருந்த பிரிட்ஜ், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களும் தண்ணீரில் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.