ரயில்வே சிக்னலை உடைக்க இளைஞர் முயற்சியா? - திருப்பத்தூரில் பரபரப்பு! - Tirupattur News in Tamil
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், சிக்னல் இருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த ஒருவர் ரயில்வே சிக்னலை உடைக்க முயற்சி செய்ததாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், பிடிபட்ட நபர் திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த கோகுல் (30) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், ரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், கோகுல் சிக்னல் உடைக்கப்பட்டதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்றும், ரயில்வே தண்டவாளத்தில் சும்மாதான் உட்கார்ந்திருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பிடிபட்ட நபரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.