ஈரோட்டில் அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர்.. குடை பிடித்தபடி பயணம் செய்த மக்கள்! - tamil news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18589328-thumbnail-16x9-erd.jpg)
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சில தினங்களாகத் தாளவாடி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி மற்றும் கோடிபுரம் ஆகிய பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பொதுவாக, மலைக்கிராமங்களில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரசு பேருந்தை நம்பியுள்ளனர். இந்நிலையில், சத்தியமங்கலத்திலிருந்து 50- க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அரசு பேருந்து, திம்பம் வழியாகத் தாளவாடிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, புளிஞ்சூர் அருகே பெய்த பலத்த மழையால் பேருந்தின் மேற்கூரையில் ஆங்காங்கே உள்ள துவாரத்தின் வழியாக மழைநீர் கொட்டியது.
பேருந்தில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமரமுடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர். ஆனால் மேற்கூரையில் ஒழுகிய மழைநீரால் பயணிகள் நனைந்தபடி பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும், மேடு, குழியுமாக உள்ள சாலையில் பேருந்து குலுங்கியபடி சென்றதால், மழைநீர் தொடர்ந்து கொட்டி பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் நனைந்தனர். இதனால், சில பயணிகள் பேருந்தில் குடை பிடித்தபடி பயணித்தனர்.
மழைநீர் பேருந்தின் அனைத்து பகுதியிலும் கொட்டியதால், பெரும் சிரமத்துக்கு உள்ளாகிய பயணிகள் நிம்மதியிழந்து பயணித்தனர். மலைப்பகுதியில் ஓட்டை ஒடசல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகுவதும், மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருவதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: விஷச்சாராயம் விவகாரம் - கொலை வழக்காக மாற்றிய சிபிசிஐடி அதிகாரிகள்