Tirupathur: வங்கி ஊழியர்கள் அலைக்கழித்ததால் போராட்டத்தில் இறங்கிய மக்கள்! - bank
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலை செய்பவர்கள் வங்கியில் பணம் எடுப்பது மற்றும் விவசாயிகள் கடன் பெறுவது தொடர்பாக வங்கி ஊழியர்கள் தங்களை அலைக்கழிப்பதாகக் கூறி தனியார் வங்கியை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வங்கி முன், அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்து உள்ளது, அரங்கல்துருகம் பகுதி. இங்கு தேசியமயமாக்கப்பட்ட பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அரங்கல்துருகம், காரப்பட்டு, கதவாளம், அபிகிரிபட்டறை, பொன்னப்பல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் மக்களுக்கான சம்பளம், முதியோர் உதவித் தொகைக்காக பணம் எடுக்கச்செல்லும் பெண்கள் மற்றும் முதியோர்கள் வங்கி ஊழியர்களால் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கிக்கடன் பெற, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஆறுமுகம், ஆகியோர் வங்கி ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வங்கி ஊழியர்கள் கடன் வழங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மற்ற மக்கள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு முன்னால் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி தலைமையிலான போலீசார் வங்கி மேலாளர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலைத் தொகை மற்றும் கடன் பெறுவது தொடர்பாக சிரமம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்த பின்னர், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு வங்கிப் பணிகளும் முடக்கப்பட்டன.