உதகை மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்.. பாரம்பரிய நடனமாடி கொண்டாடிய தோடர் இன மக்கள்! - 116th birthday of Nilgiri Mountain Railway
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 9:36 PM IST
நீலகிரி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்டோபர் 15 முதல் உதகை மலை ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை ரயில் நிலையம் வரை ரயில் பாதையில், 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. ஆசியாவிலேயே மிகச் செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இந்நிலையில் இன்று 116-வது பிறந்த நாள் விழா உதகை ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. நீலகிரி மலை ரயில் (Nilgiri Mountain Railway) அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் தலைமையில், நிர்வாகிகள், மலை ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மலை ரயில் குறித்த சிறப்புகளைச் சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைத்து வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து மண்ணின் மைந்தர்களான தோடர் இன மக்கள் தங்களது கலாச்சார உடையில் மலை ரயில் குறித்து அவர்களது பாரம்பரிய மொழியில் பாடல் பாடி நடனமாடியது மலை ரயிலில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.