கள்ளச்சாராய சோதனையின்போது யானைக்கூட்டத்தைக் கண்டு போலீசார் அச்சம்! - கள்ள சாராய சோதனை
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட சாத்கர், கோட்டச்சேரி, கள்ளிச்சேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி பேரணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு தொடர் புகார் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வேலூர் சரக டிஐஜி மற்றும் வேலூர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 10 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாராயத்தை முழுமையாக ஒழிக்க சுழற்சி முறையில் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மலையில் போலீசார் கள்ள சாராய சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று சாத்கர் மலையில் போலீசார் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5க்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய கூட்டம் சாத்கர் மலையில் இருந்து இறங்கியுள்ளது. அதனைக் கண்டு அச்சமடைந்த போலீசார் மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். பின்னர் போலீசார், இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைக்கூட்டம் சாத்கர் மலையில் இறங்கி அருகில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கள்ளச்சாராய சோதனையின்போது போலீசார் யானைக் கூட்டத்தை கண்டு அச்சமடைந்து மலையிலிருந்து இறங்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.