கணவன் - மனைவி தகராறு: தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு... நடந்தது என்ன? - Peranampattu news
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் மற்றும் அவர் மனைவி நசீரா இருவரும் குழந்தைகளுடன் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது சிக்கந்தருக்கும், நசீராவுக்கும் இடையே வரும் வழியில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் குழந்தை மற்றும் மனைவி உள்ளிட்ட இருவரையும் சிக்கந்தர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அருகே இருந்த சீனு என்பவர் இதனை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் இருவரும் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் சிக்கந்தர் வைத்திருந்த ஆயுதத்தால் குத்தியதில் சீனு என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவர் அப்துல் பாஷித் என்பவர் மனைவி குழந்தைகளை அடிக்க வேண்டாம் என சிக்கந்தரை அடித்ததாக கூறப்படுகிறது.
சீனு தாக்கப்பட்டார் என்று தகவல் அறிந்து வந்த சீனுவின் நண்பர்கள் சிக்கந்தர் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்ட சிக்கந்தர், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிக்கந்தர் மனைவி சிசிடிவி காட்சிகளுடன் கொடுத்த புகாரின் பேரில் சிக்கந்தரை தாக்கிய சீனு, யுவன் குமார், வசந்த், நீலகண்டன், வெங்கடேசன், அப்துல் பாஷித் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒருவர் தலைமறைவு ஆகியுள்ளார். தற்போது திமுக கவுன்சிலர் கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்தது பேர்ணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.