பண்ணையில் புகுந்து ஆடு, கோழிகளை திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகள் வைரல்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: நல்லம்பள்ளி அடுத்த கோடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.28-ஆம் தேதி இரவு, வழக்கம் போல் ஆட்டுப்பண்ணையில் நுழைந்து ஆடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு, அதன் கதவைப் பூட்டாமலேயே வந்துள்ளார்.
இந்நிலையில், மூன்று இளைஞர்கள் பண்ணைக்குள் நுழைந்து, ஆடு மற்றும் மூன்று கோழிகளைப் பிடித்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆடு மற்றும் கோழிகள் கத்தும் சத்தம் கேட்டு, கிருஷ்ணன் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்பொழுது மூன்று இளைஞர்கள் ஆடு மற்றும் கோழிகளைத் திருடி, இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளனர்.
அவர்களைச் சத்தமிட்டவாறே கிருஷ்ணன் துரத்தியும், மூன்று இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில், அந்த மூன்று இளைஞர்களும் பண்ணையில் நுழைந்து கோழி மற்றும் ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சி, அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை அறிந்த இளைஞர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு பண்ணையில் நுழைந்து ஆடு மற்றும் கோழிகளைத் திருடிச் செல்லும் காட்சிகள், தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தடங்கம் பகுதியைச் சார்ந்த கமலக்கண்ணன், பிரேம்குமார் மற்றும் ஜெகநாதன் ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.