தொட்டி இங்கே! தண்ணீர் எங்கே? - கொந்தளித்த மக்கள் சாலை மறியல்!
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பாரதியார் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பழுதடைந்த அந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அகற்றப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் புதிதாக சுமார் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கொந்தளித்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஒரு வார காலத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குமரியில் அசால்டாக சைக்கிள் திருட்டு.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?