பணி நிரந்தரம் செய்யக்கோரி ஈரோட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்! - part time special teacher
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2023, 8:53 PM IST
ஈரோடு: தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 12,200 பகுதி நேரச் சிறப்பு ஆசியர்கள் உடற்கல்வி, கணினி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களில் ரூபாய் 10 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அனைவரையும், முழுநேர ஆசிரியர்களாக மாற்றி பணிநிரந்தரம் செய்யக்கோரிக் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று (செ.4) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி, பகுதி நேர சிறப்பாசிரியர்களை, முழுநேர ஆசியர்களாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு இந்த அறிவிப்பை நாளை கொண்டாடவுள்ள ஆசிரியர் தினத்தன்று அறிவித்து தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவினை, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.