திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை கிடைத்ததால் குறவன் வேடமணிந்து பெற்றோர் வேண்டுதல்!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததையடுத்து குழந்தைக்கு குறவர் வேடமணிந்து தர்மம் பெற்று வேண்டுதலை பெற்றோர் நிறைவேற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் மணவாளபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் - ரதி தம்பதியினர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி, கடந்த மாதம் மாலை அணிவிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது கடந்த 5ஆம் தேதி
திருச்செந்தூர் கோயிலில் வைத்து, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டு 5 நாட்களுக்குப் பின் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து மீட்கப்பட்டடார்.
முத்துராஜ்- ரதி தம்பதியினரிடம் பக்தர்போல பழகி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த திலகவதி என்ற பெண் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில், குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்ததையடுத்து, குழந்தைக்கு குறவர் வேடமணிந்தும், மடிப்பிச்சை எடுத்தும் காணிக்கை பெற்று பெற்றோர் வேண்டுதலை நிறைவேற்றினர்.
குழந்தை காணாமல் போனபோது, குழந்தை கிடைக்க வேண்டுமென அம்பாளிடம் வேண்டுதல் வைத்ததாகவும், அம்பாளின் அருளினால் குழந்தை கிடைத்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.