அக்.23-இல் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை! - today latest news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:07 AM IST

திண்டுக்கல்: பழனி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வருகிற 23ஆம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே மலைக் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி எனவும், மீண்டும் மறுநாள் 24ஆம் தேதி காலை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பழனி மலைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பழனி மலைக் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நவராத்திரி திருவிழா நேற்றைய முன்தினம் (அக்.15) மலைக் கோயிலில் காப்புக் கட்டுடன் துவங்கியது. பழனி கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் இந்த நவராத்திரி திருவிழா, இந்த ஆண்டு வருகிற 23ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறும். முக்கிய நிகழ்வான விஜயதசமி அன்று, உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கும், அதனைத் தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.

மேலும், மாலை 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு ஆனதும் சன்னதி திறக்கப்படும். பராசக்தி வேல் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் சென்று வன்னிகா சூரனை அம்பு போட்டு வதம் செய்து புறப்பாடாகி, மலைக் கோயிலுக்குத் திரும்பிய பின்பு இராக்கால பூஜை நடைபெறும்.

மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து அக்டோபர் 23 அன்று காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

நவராத்திரி விழாவான 15.10.2023 முதல் 23.10.2023 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. 23ஆம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே மலைக் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மீண்டும் 24.10.2023 அன்று மலைக் கோயிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.