பாலமேடு ஜல்லிக்கட்டு: திமிறும் காளைகளின் திமிலைப் பிடிக்க போட்டியிடும் காளையர்கள்..!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 9:35 AM IST
மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் சிறப்பாக மதுரையில் வருடாந்தோறும் ஜல்லிக்கட்டு பண்டிகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதல் நாளாக நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று உலக புகழ் பெற்ற 'பாலமேடு ஜல்லிக்கட்டு' இன்று (ஜன.16) காலை 8 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவங்கப்பட்டது.
ஆராவரமாகத் துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 8 சுற்றுகள் மாலை 4 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்பது வழக்கம். முன்னர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 3,677 காளைகளும் 1412 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்த நிலையில், இன்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி துவங்கி விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதற்சுற்று வரை முடிந்து 2ஆம் சுற்று துவங்கியுள்ளது.
காலை 8.45 மணி நிலவரப்படி காயமடைந்தவர்கள் விபரம்
- மாடுபிடி வீரர்கள் : 02
- மாட்டின் உரிமையாளர்கள் : 03
- பார்வையாளர்கள் : 02
- காவல்துறை : 01
- மேல்சிகிச்சை : 01
இரண்டாவது சுற்று ஆரம்பித்த நிலையில், கருநீல நிற ஆடையணிந்த 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.