"பொதுச்செயலாளராக நான் கூட வரலாம்" - வைத்திலிங்கம் பேச்சு
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரும் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று(மார்ச்.18) தஞ்சாவூரில் ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருப்பார்கள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம், தான் கூட பொதுச் செயலாளராக வரலாம் என தெரிவித்தார்.
கடந்த மாதம் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்-க்கு அனுப்பியிருந்த கடிதத்தில், ஓபிஎஸ்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், அந்த கடிதத்தை தாங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிடிவி தினகரன், சசிகலாவுக்கு தூது! ஓபிஎஸ்சின் அடுத்த நகர்வு என்ன?