Ooty Happy Street: உதகை தெருக்களில் குத்தாட்டம் போட்ட சுற்றுலாப் பயணிகள்! - happy street program
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18620220-thumbnail-16x9-ooty.jpg)
நீலகிரி: உதகையில் கோடை விழா நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாகச் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பிரபாகர் துவக்கி வைத்தார். உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீலகிரி மாவட்டத்தின் உள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
இதனால் உதகை நகரமே விழாக்கோலம் கொண்டது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஆண்டுதோறும் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாகக் காய்கறி கண்காட்சியுடன் கோடை நிகழ்ச்சி துவங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனைத் திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில் உதகையில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, வார விடுமுறை நாட்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரை மாவட்ட காவல்துறை சார்பில் ஹேப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பிரபாகர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர்களான தோடர், கோத்தர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கலாச்சார நடனம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் என கேரளா மாநில செண்டை மேளத்திற்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழந்தனர்.
மேலும், மாணவர்களின் கராத்தே நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்ததுடன், கேரம், சதுரங்கம், பல்லாங்குழி, ஜூடோ போன்ற விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் உதகையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க வருகை புரிந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினர்.
இதையும் படிங்க: நீலகிரியில் நாய்கள் கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற க்யூட் வீடியோ!