மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய பள்ளி நண்பர்கள்!
🎬 Watch Now: Feature Video
தேனி: பள்ளிப் பருவ கால கட்டத்தைக் கொண்டாடும் வகையில், தேனியில் 40 ஆண்டுகள் கழித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். மாணவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி, 90 வயதிலும் தன் மாணவர்களைச் சந்திக்க ஆசிரியர் வருகை புரிந்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், 121 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில், இப்பள்ளியில், கடந்த 1983 ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 1985 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும், ஒரே மாதிரியான சீருடையில் வருகை புரிந்தனர். தாங்கள் பள்ளியில் எழுதி வந்த கவிதை மற்றும் ஓவிய கையெழுத்துப் பிரதியை, ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் காட்டி மகிழ்ந்தார்.
40 வருடங்கள் கழித்துச் சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு அருந்த வேண்டும் என்பதற்காக, விருந்து பரிமாறப்பட்டது. பின்னர், அனைவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், அனைவரும் இனி ஆண்டுதோறும் இது போன்று நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பிரியாவிடை கொடுத்தனர்.