பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது! - காப்பு கட்டுடன் துவங்கிய நவராத்திரி விழா
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 9:16 PM IST
திண்டுக்கல்: ஆண்டுதோறும் மகாளய அமாவாசையைத் தொடர்ந்து அடுத்த நாளான பிரதமையில் நவராத்திரி வழிபாடு துவங்கப்படும். இந்த வழிபாடு நாடு முழுவதும், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி பூஜை அக்டோபர் 15-ஆம் தேதி துவங்கி 23-ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கும் பெண்கள் கொலு பொம்மைகள், சிறப்பு வழிபாடுகள் செய்து துர்கை அம்மனை வழிபடுவர்.
இதையடுத்து, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், நவராத்திரி திருவிழா இன்று(அக்.15) காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இந்த பூஜைகளையொட்டி, உச்சி நேரத்தின் போது மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி, விநாயகர், வீரபாகு ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் துவாரபாலகர், கொடிக்கம்பம் மயில்வாகனம் ஆகியோருக்கும் காப்பு கட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில், தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோயில் மட்டுமின்றி திருஆவினன்குடிக் கோயில், அருள்மிகு பெரிய நாயகியம்மன் கோயிலிலும் காப்பு கட்டி நவராத்திரி விழாத் தொடங்கியது. எட்டாம் நாள் அன்று ஆயுத பூஜை, ஒன்பதாவது நாள் அன்று சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி திருவிழா வன்னிகாசூரன் வதையுடன் நடைபெற இருக்கிறது. திருக்கோயில் நிர்வாகத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளை வெகு விமரிசையாக செய்து வருகின்றனர்.