தஞ்சை அருங்காட்சியகத்தில் 'மியூசிக்கல் டான்ஸ் பவுண்டைன்' - Thanjavur Museum video
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டத்தில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடந்த ஜனவரி 14ஆம் தேதி அருங்காட்சியமாக தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக சரஸ்வதி மஹால் நூலக காட்சி அறை, உலோக, கற்சிற்ப காட்சியறை, நடந்தாய் வாழி காவேரி விவசாய காட்சியறை, சோழர் ஓவிய காட்சியறை, தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் காட்சியறை, இசைக் கருவிகள் மற்றும் நிகழ்த்துக் கலை காட்சியறை என மொத்தம் 12 காட்சி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாமல், 7டி தியேட்டர் அரங்கம் மற்றும் அரிய வகை பறவைகள் சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் நாள்தோறும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருங்காட்சியகத்திற்கு மேலும் அழகூட்டும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் செயற்கை நீரூற்று 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நீரூற்று வண்ண மின்விளக்குகளால் அமைக்கப்பட்டு, நாட்டின் தேசியக்கொடி நிறத்திற்கு ஏற்றார்போல் மாறுவது போன்றும், செம்மொழி தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டு, அதற்கு ஏற்றார் போல் நீரூற்று நடனம் ஆடுவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.