நிலத்தகராறு: கொலை மிரட்டல் விடுத்த மகன்.. ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தாய்.. - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18013247-thumbnail-4x3-sui.jpg)
திருநெல்வேலி: திருத்துப்பகுதியைச் சேர்ந்தவர், இசக்கி அம்மாள். இவரது மகன் முத்தையா, மகள் வெயிலாட்சி. இதில் வெயிலாட்சி இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில், வெயிலாட்சியின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகள் சுவாதி நாச்சியார், மகன் நிஷாந்த் ஆகியோருடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இசக்கியம்மாளுக்குச் சொந்தமான சொத்துகளை இரண்டு குழந்தைகளுக்கும் பிரித்து தருவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவரது மகன் முத்தையா, சொத்துகளை பிரித்து யாருக்கும் கொடுக்கக் கூடாது அனைத்து சொத்துகளும் தனக்குத் தான் சொந்தம் என இசக்கியம்மாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கியம்மாளிடம் சென்ற அவரது மகன் முத்தையா, பாட்டிலால் அடித்துக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், கொலை செய்தால் மூன்று மாதம் மட்டும் தான் சிறை தண்டனை இருக்கும் என்றும்; பிறகு வெளியில் வந்துவிடுவதாக கூறி தங்கை வெயிலாட்சிக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனால் மன வேதனையில் இருந்த இசக்கியம்மாள், தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தங்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து இசக்கியம்மாளும், அவரது மகளும் உடலில் ஊற்றிக் கொண்டனர். பின்னர் தீயை பற்ற வைக்கமுயலும்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறை வாகனத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து வெயிலாட்சி கூறும்போது, “தொடர்ந்து எனது அண்ணன் முத்தையா அடிக்கடி எனது தாயை அடித்து துன்புறுத்துகிறார். நிலத்தை அபகரிப்பதற்காக தினந்தோறும் என் தாயை அடித்துக் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 17) மன வேதனை அடைந்து நானும், எனது தாயும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றோம். இச்சம்பவம் குறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வழங்காததால் அவலம் - தங்கையின் சடலத்தை 10 கி.மீ துமந்து சென்ற அண்ணன்! என்ன நடந்தது?