ஓட்டப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த நாய்கள்! - pet animals
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: கிராமப்புறங்களில் முயல், அணில், வெள்ளெலி ஆகியவற்றை வேட்டையாடுவதை தடுக்கவும், கிராமப் புறங்களில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாட்டு நாய்களின் திறமைகளை வெளிப்படுத்தவதற்காகவும், நாட்டு நாய்களை அதிகமாக வளர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் நாட்டு நாய்களின் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை தாலுகா அந்தோணியார்புரத்தில் வைத்து நடைபெற்ற நாய்களுக்கான இந்த ஓட்டப் பந்தயத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70 நாட்டு நாய்கள் பங்கேற்றன. முதற்கட்டமாக இரண்டு, இரண்டு நாய்கள் வீதம் 35 முதல் சுற்று ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற நாய்கள் அடுத்து வரும் சுற்றுகளில் பங்கேற்றன. கடைசியாக 10 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் மூன்றுக்கு சிறப்பு பரிசுகளும், ஏழு நாய்களுக்கு ஆறுதல் பரிசுகளும் அளிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிம்பு என்ற நாய்க்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு தூத்துக்குடி மாவட்டம் சீசர் ரேசிங் கிளப் கடாச்சபுரத்தைச் சேர்ந்த சீசர் என்ற நாய்க்கும், மூன்றாவது பரிசு நெல்லை மாவட்டம் முடவன் குளத்தை சேர்ந்த எஸ்.எம்.கே.குமார் என்பவரின் நாய்க்கும் கிடைத்தது. பின்னர் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கோப்பையும், பண முடிப்பும் பரிசாக வழங்கப்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் வெகு தூரம் துள்ளி குதித்து ஓடும் பொய்யான பொம்மை முயலைப் பிடிக்க ஒட்டப்பந்தய நாய்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு தலை தெறிக்க ஓடி எல்கைக் கோட்டை தொட்டது. சுற்றி நின்ற மக்கள் நாய்களுக்கான ஓட்டப் பந்தயதை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.