பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்! - kolathur perambalur
🎬 Watch Now: Feature Video

பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் இன்று (மே 12) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை 250 ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கினர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யமாளாதேவி மற்றும் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பணியில் இருந்தனர்.