'அரசியலுக்காகத்தான் இந்த ரெய்டு’ - அமைச்சர் ஐ.பெரியசாமி - Dindigul news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்பாடு செய்ய திட்ட வரைவு தயார் செய்துள்ளோம்.
கொடைக்கானலில் விரைவில் ரோப் கார் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய மாற்றுச்சாலை திட்டங்கள் ஏற்படுத்த தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருவது அரசியல் காரணம். இதனை அரசியலாக்க பார்க்கின்றனர். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்போது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாற்று வழிப் பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்துறை இதில் அடங்கியுள்ளதால், வனத்துறையிடம் தடையில்லா சான்று வாங்க அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பேரீஜம் வழியாக மூணாறு செல்லும் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். கட்டடங்களுக்கு மாஸ்டர் பிளான் திட்டத்தில் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்படுத்த முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” என்றார்.