திருச்செந்தூரில் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் - டிடிவி தினகரனுடனான ரகசிய சந்திப்பு குறித்து குலவை விட்டு கிண்டல்! - actress roja
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், பிரதோசத்தை முன்னிட்டு சுவாமிக்கு பூரண கும்ப பன்னீர் அபிஷேகம் செய்து, ஏகாந்த தரிசனம் செய்த அவர் மூலவர், சண்முகர், மற்றும் தட்சிணாமூர்த்தி சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்செந்தூர் முருகனை பிரதோச நேரத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தனது ராசி பலனுக்கு குரு மாறியிருப்பதால் பிரதோச நாளில் தரிசனம் செய்ய வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார்'' என்றார். மேலும், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சி இரண்டையுமே இரண்டு கண்களாக முதலமைச்சர் பார்த்து வருவதாகவும், அதனால் உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை, நடைபெறும் அனைத்து தேர்தலிலும் வாக்காளர்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர், ''வரும் 2024-ல் நடைபெறும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 175/175 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிபெறும்'' என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரிடம், நடிகர் ரஜினிகாந்த் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் மதுரையில் நடைபெற்ற திடீர் ரகசிய சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் ரோஜா குலவை விட்டு கிண்டல் செய்து பதிலளிக்காமல் சென்றார்.
இதையும் படிங்க: +2 தேர்வில் முதலிடம் பிடித்த மாநகராட்சி பள்ளி மாணவி! கல்லூரி கட்டணங்களை ஏற்றுக் கொண்ட எத்திராஜ் கல்லூரி!