கோவையில் பாலை தரையில் கொட்டிப் போராட்டம்! - திமுக அரசு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18028030-thumbnail-4x3-top.jpg)
கோவை: தமிழ்நாடு அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
மாட்டுத் தீவனம், பாலுக்கான உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் விலை குறைவு என்பதால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் மானியம் வழங்கிட வேண்டும், ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, பாலை தரையில் கொட்டி அவர்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.