தண்டவாளத்தில் முகாமிட்ட யானை கூட்டம்.. தாமதமாக இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி:. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள், புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனிடையே, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கனவு பயணமாக இந்த ரயில் பயணம் அமைந்துள்ளது. இந்த ரயிலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையாகாது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாக மூன்று காட்டு யானைகள் சுற்றித் திரியும் நிலையில் நேற்று (மார்ச்.17) குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற உதகை மலை ரயில் காட்டேரி பகுதிக்கு வந்தது.
அப்போது ரயில் பாதையில் மூன்று காட்டு யானைகளும் முகாமிட்டு இருந்ததை ரயில்வே ஊழியர் கண்டு சுதாரித்துக் கொண்டனர். பின்னர், சிவப்பு கொடியைக் காட்டி ரயிலை நிறுத்தினர். இதனால் சுமார் 1/2 மணி நேரம் அடர்ந்த வனப்பகுதியில் மலை ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்த வன ஊழியர் யானைகளைக் காட்டுப்பகுதிக்குள் விரட்டிய பிறகு, ரயில் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றது. இதனால், சிறிது நேரம் தாமதமானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் காட்டு யானைகள் ரயில் பாதையில் கூட்டமாக முகாமிட்டு இருந்ததால் ஊட்டி மலை ரயில் தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.