நெகிழியைத் தவிர்க்கும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்ட விழிப்புணர்வு: பெரம்பலூரில் களைகட்டிய மாரத்தான் போட்டி - marathon awareness program
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: நெகிழியைத் தவிர்க்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தும், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1021 ஆண்களும், 1003 பெண்களும் என மொத்தம் 2024 பேர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த மாரத்தான் பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்கு பேட்டை, கடைவீதி, அரசு தலைமை மருத்துவமனை, கல்யாண நகர், அரணாரை பிரிவு மற்றும் துறையூர் சாலை வழியாக தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், முதலில் வந்த ஆண்கள் 10 பேர் மற்றும் பெண்கள் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பரிசளிப்பு விழா நிகழ்ச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பரிசுத்தொகையாக முதலில் வந்தோருக்கு ஐந்தாயிரமும், இரண்டாம் பரிசு தொகையாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசுத்தொகையாக 2 ஆயிரம் ரூபாயும், எஞ்சியுள்ள 7 பேருக்கு 500 ரூபாயுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற நடத்துநர் கிருபானந்தன் - வயது 62, என்பவர் 15வது முறையாக 7 கிலோமீட்டர் 40 நிமிடங்களில் கடந்த அவரை ஊக்குவிக்கம் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.