மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்து கருகிய அட்டை லாரி - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நால்வர்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவில்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். உடன் 2 ஆண்கள் 2 பெண்களும் பயணித்து வந்துள்ளனர். இந்நிலையில் லாரி துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் வரும்போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விடுவதற்காக லாரியை, இடது புறமாக திருப்பியுள்ளனர்.
அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் கம்பெனியின் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியில் அட்டைப்பெட்டிகள் லாரியின் மீது உரசியுள்ளது. இதனால் அட்டைப்பெட்டிகள் மீது தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. அதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததால், உடனடியாக லாரி ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர். லாரியில் தீ மளமளவென பரவிய நிலையில், பாலகிருஷ்ணன் என்ற இளைஞர் தீ எரிந்து கொண்டிருந்த லாரியில் ஏறி, லாரியை ஸ்டார்ட் செய்து அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தனசேகரபாண்டியன் மற்றும் ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.