தமிழகத்தை பார்த்து திட்டங்களை செயல்படுத்தும் பிற மாநிலங்கள் - உதயநிதி பெருமிதம்! - மகளிர் உரிமைத் தொகை திட்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 2, 2023, 5:58 PM IST
நீலகிரி: உதகையில் நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ரூபாய் ஒரு கோடியே 22 லட்சம் நிதியை மாவட்ட கழக செயலாளர் பா.மு முபாரக் உதயநிதி ஸ்டாலினிடம் அளித்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததால் கலைஞர் குடும்பம் தான் வாழ்ந்து கொண்டு வருகிறது எனக் கூறி வருகிறார் ஆம் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கலைஞரின் குடும்பம் தான். ஒவ்வொருவரும் கலைஞரின் வாரிசு கலைஞரின் பேரக்குழந்தைகள் தான்.
ஒன்றிய பாஜக அரசு ஒரு கி.மீ., தூரம் வரை சாலை அமைக்க ரூபாய் 250 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டுகிறது. ரமணா படத்தில் வருவது போன்று இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். மேலும் திராவிட ஆட்சியில் மகளிர் இலவச பேருந்து பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அண்டை மாநிலமான தெலுங்கானா அரசு தமிழகம் வருகை தந்து கேட்டறிந்ததாகவும், மேலும் தங்கள் மாநிலத்தில் இத்திட்டத்தை செயல்முறைபடுத்துவதாகவும் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்