ரயில் பயணியிடம் 2¾ கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா? - Today Vellore News
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே காவல் துறையினர் நேற்று (மார்ச் 16) இரவு சோதனை நடத்தி உள்ளனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலின் 3-வது எண் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தனர். இதில், 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
மேலும் ஆவணங்கள் இன்றி தங்கம் மற்றும் பணத்தைக்கொண்டு வந்த நபர் கோயம்புத்தூரை சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் நகையை வேலூர் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஹவாலா பணம் கடத்தல் நடந்ததா என ஆனந்த நாராயணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.