திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேக வைபவம்! - Srirangam Temple Elephant Andal
🎬 Watch Now: Feature Video
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரமன்று, ஆனி திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகம் பெருமாளுக்கு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்கக்குடம் எடுத்துச்சென்று, காவிரிக் கரையில் அமைந்து உள்ள அம்மா மண்டபம் புனித திருகாவிரியில் இருந்து திருமஞ்சனம் (புனிதநீர்) செய்ய தங்கக்குடம் மற்றும் வெள்ளிக்குடங்களில் நீர் நிரப்பப்பட்டு, தங்கக்குடத்தை ஶ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்தும், வெள்ளிக்குடங்களை அர்ச்சகர்கள் தோள்களில் சுமந்தும் மங்களவாத்தியங்கள் முழங்கிட கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்தனர்.
உள் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர், புனித நீர் கோயில் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது. மூலவருக்கு சாத்தியிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்து பச்சைக் கற்பூரம் சாற்றி, மறுபடியும் அங்கிகள் மாற்றப்படும். அதனைத் தொடர்ந்து இன்று மாலை பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படும். தைலக்காப்பு செய்தவுடன் இன்று முதல் 48 நாள்கள், நம்பெருமாள் திருவடி சேவை கிடையாது.
வழி நெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் புனித நீர் கொண்டு செல்லும் கைங்கர்ய நிகழ்ச்சியினை கண்டு வணங்கியபடி நின்றனர்.
ஜேஷ்டாபிஷேகம் விழாவையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூலவர் சேவை செய்ய அனுமதி கிடையாது. நாளை மாலை திங்கள் கிழமை 4.30 மணிக்கு மேல் மூலவர் சேவை செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், இந்து சமய அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.