இந்தியாவில் முதன்முறையாக 3D கிறிஸ்துமஸ் குடில்..! இயேசு பிறந்த பெத்தலகேம் கிராமத்தை திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்த பட்டதாரி இளைஞர்!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 8:11 PM IST
|Updated : Dec 26, 2023, 4:20 PM IST
திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இன்று (டிச.25) நடைபெற்று வருகிறது. மேலும், கிறிஸ்து எப்படிப் பிறந்தார் என்பதைக் காண்பிக்கும் வகையில் அனைத்து கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குடில்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொறியியல் பட்டதாரி சேவியர் ரிச்சர்ட் என்பவர் குடில் அமைப்பதில் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
இத்தாலி நாட்டில் அனிமட்ரானிக்ஸ் முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து உள்ளதை இணையத்தின் மூலம் கண்ட சேவியர் ரிச்சர்ட் அதே போல தானும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ரிச்சர்டின் அந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. இதற்கு 2 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அனிமட்ரானிக்ஸ் (தானியங்கி அசைவூட்டப்பட்டது) 3D தொழில்நுட்பத்தின் மூலம் இயேசு பிறந்த ஊரான பெத்தலகேம் கிராமத்தைத் தத்ரூபமாகத் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியில் உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தில் இவர் வடிவமைத்துள்ளார்.
இந்த குடிலில் அமைக்கப்பட்டுள்ள பொம்மைகள் மூன்று முதல் நான்கு அசைவுகள் கொண்டதாக இருப்பது இதற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் 3D பிரிண்டிங் மற்றும் அனிமட்ரானிக்ஸ் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இந்த முயற்சியை எடுத்ததாகப் பெருமையோடு கூறியுள்ளார்.
இந்த ஆலயத்தின் பங்குத் தந்தை மற்றும் ஊர் மக்களின் உதவியோடு அனிமட்ரானிக்ஸ் முறையில் இந்த குடிலை அமைத்து, அதனை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.